வியாழன், 28 நவம்பர், 2024

பறவைகளின்காதல்

 பறவைகளின் காதல் வாழ்க்கை!

மனிதர்கள்தாம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையோடு(!) வாழ்பவர்கள் என்று எண்ண வேண்டாம்.
சே…சே…நாங்கள் அப்படியெல்லாம் எண்ணவில்லையாக்கும்! மனைவி இணைவி துணைவி சகிதம் வாழும் 'மனிதருள் மாணிக்கங்கள்' எம்மில் பலருண்டு என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கவே செய்கிறது; 😉அந்தப் பஞ்சாயத்தை அப்புறம் வைத்துக் கொள்வோம்!
பறவைகளிலும் இணைபிரியாமல் வாழ்பவை உண்டு. அவ்வாறு வாழும் பறவைகளுள் முதன்மையாகக் குறிப்பிடப்படுவது 'மகன்றில்' எனும் நீர்ப்பறவை. இவற்றில் காதல் இணையராக வாழும் ஆண், பெண் பறவைகள் சிறிதுநேரப் பிரிவைக்கூடத் தாங்காதவை என்கிறது குறுந்தொகைப் பாடல்.
பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து
இருவேம் ஆகிய வுலகத்து
ஒருவே மாகிய புன்மை நாம் உயற்கே. (குறுந்: 57 – சிறைக்குடி ஆந்தையார்)
”நீரில் நீந்திச் செல்லும்போது. இடையில் குறுக்கிடும் பூவானது தம்மைச் சில நொடிகள் பிரித்தால்கூட அதனை ஆண்டுக் கணக்கில் பிரிந்திருப்பதாக எண்ணி வருந்தும் மகன்றில் பறவைகளின் சேர்க்கைபோல, ஈருடல் ஓருயிராக வாழ்கின்றவர்கள் நானும் தலைவனும். இல்லறக் கடமைகளை ஆற்றுவதற்காக வெளியே சென்றிருக்கும் தலைவனைப் பிரிந்து காதல்நோயில் வாடுவதைவிட என்னுயிர் உடனே போய்விடுவது நல்லது” 😞என்று இப்பாடலில் வருந்தியுரைக்கிறாள் தலைவி.
மகன்றில் போலவே அன்றில் பறவைகளும் இணைபிரியாமல் வாழ்பவையே. சிலர் அன்றிலும் மகன்றிலும் ஒன்று என்றெண்ணிக் கொள்வர். அவை வேறுவேறானவை. மகன்றில் பறவைகள் நீர்வாழ்வன; மருத நிலத்தவை. ஆனால், அன்றில்கள் நெய்தல்நிலத்தைச் சார்ந்தவை. பெரும்பாலும் இவை பனை மரங்களில் உறைவதாக இலக்கியங்கள் காட்டுகின்றன.
ஒன்றில் காலை அன்றில் போலப்
புலம்புகொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன்… (நற்: 124 – மோசி கண்ணத்தனார்)
ஒன்று பிரிந்தவேளையில் மற்றோர் அன்றில் பறவை வாழாமல் உயிர்நீத்து விடுதல்போல், நின்னைப் பிரிந்து தனித்து வாழும் வாழ்க்கையை யான் ஆற்றாமல் இறந்துபடுவேன்” என்று தலைவனிடம், தலைவியின் சார்பாக, உரைக்கின்றாள் தோழி இப்பாடலில்.
ஒன்று அன்றி மற்றொன்று இல்(லை) என்பதால்தான் இப்பறவைகள் அன்றில் எனும் பெயர்பெற்றன போலும்! 😇
இவ்வரிசையில் புறாவையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.
இணையை மாற்றாமல் ஒரே இணையோடு இறுதிவரை வாழும் தன்மையுடையவை புறாக்கள். இன்னொரு பெண் புறா மத்தாப்புப் போல் தன் பளீர் அழகைக் காட்டி மயக்கப் பார்த்தாலும் உத்தமக் குடும்பத் தலைவனான ஆண் புறா அதுகண்டு மயங்காதாம்; தன் துணைப் புறா இறந்து தபுதார நிலை வாய்த்தால் மட்டுமே (when it becomes a widower) இன்னொரு பெண் புறாவை அது நாடுமாம். இதை நான் சொல்லவில்லை! பாவேந்தர் பாரதிதாசன் தம்முடைய 'அழகின் சிரிப்பு' எனும் நூலில் அழகாய்ப் பதிவுசெய்துள்ளார்.
ஒருபெட்டை தன்ஆண் அன்றி
வேறொன்றுக் குடன் படாதாம்
ஒருபெட்டை மத்தாப்பைப் போல்
ஒளி புரிந்திட நின்றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
வேறொரு சேவல் தம்மில்
ஒருபுறா இறந்திட்டால் தான்
ஒன்றுமற் றொன்றை நாடும்! (அழகின் சிரிப்பு)
இவற்றிலிருந்து என்ன தெரிகின்றது? உயர்ந்த காதலை நாம் பறவைகளிடமும் கற்றுக்கொள்ளலாம் என்பதுதானே!🙂

வியாழன், 21 நவம்பர், 2024

மகிழ்ச்சியான வாழ்வியில்

ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது. பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது. 

பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று. 

எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி. 

அன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும். அங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும். எந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.

நம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும். பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும். 

பால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு. அதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு. 

பாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள். இருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது.

ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது. எல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள்.

நாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர். அவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் ’பஞ்ச பாண்டவர்’. காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள். நூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள். உடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள். சமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள். தீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும்.

அந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு, கைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள். சமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள். நள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக் கொண்டு ’என்ன ஆபத்தோ'  என்று விசாரிக்க வருவார்கள். ’அண்ணன்’ என்றும் ’தம்பி’ என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம். அன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. 

அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டிருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு. இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு. அவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள்.

ஜமுக்காளமும் மடக்கு நாற்காலியும்

மரச் சாமான்கள் அன்று விலை அதிகம். வீட்டடுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை. 

பெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும். ஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும். வருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும். இன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும். விருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். ஏணி என்பது ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும்.

பரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும். மரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு.

நம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை. உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு காலிகள் இருந்ததால். தோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். விருந்தினர் அமர்ந்து சாப்பிட நான்கைந்து பலகைகள் இருந்தன. தரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள்.

பக்கத்து வீட்டு அட்டிகை

அவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு. திருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள். சமையல் எரிவாயு திடீரெனத் தீரும்போது பக்கத்து வீட்டு உபயத்தால் அடுப்பைப் பற்ற வைப்பதும் உண்டு. அன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன. 

கைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நர்த்தனமாடியது. பெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும்.

இரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது. கிராமங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம். எந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம். ஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம்.

அதற்காகவே பெரிய தொட்டிகள். உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை. வருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள். கரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொடுப்பதில்லை. இந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது.

வீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும். அக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும். ஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு. வசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை. வேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.

இன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை. அண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் தகராறு. அவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம். அழுகி எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள். 

பற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது. பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை.



திங்கள், 18 நவம்பர், 2024

'குழிக்குள் புதிய உலகம்'

 'குழிக்குள் புதிய உலகம்' 600 அடிக்கு கீழ் வளரும் பழங்கால காடு கண்டுபிடுப்பு..!

குழியின் உள்ளே  மூன்று குகைகளையும்   நன்கு பாதுகாக்கப்பட்ட பழமையான காடுகளையும் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் குகை ஆய்வாளர்கள் ஒரு மடுவின் அடிப்பகுதியில் மறைந்து, செழித்து, வளர்ந்து வரும் 130 மீட்டர் உயரமுள்ள மரங்களைக் கொண்ட காடுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.  630 அடி ஆழம் மற்றும் 176 மில்லியன் கன அடிக்கு மேல் பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் காடு சிங்க் ஹோல் எனப்படும் பாரிய மூழ்கிய குழியில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் அறிவியலால் அறிவிக்கப்படாத தனித்துவமான உயிரினங்களின் தாயகமாக காடு இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மூழ்கிய குழி அல்ல இது. இதுவரை சுமார் 30 சிங்க் ஹோல்கள் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கண்டறிந்ததில் தெற்கு சீனாவில் உள்ள இந்த குவாங்சி தளம் மிகப்பெரியது


இந்த குழியின் உள்ளே  மூன்று குகைகளையும்   நன்கு பாதுகாக்கப்பட்ட பழமையான காடுகளையும் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.“இந்த குகைகளில் இதுவரை அறிவியலால் அறிவிக்கப்படாத அல்லது விவரிக்கப்படாத இனங்கள் உள்ளன " என்று பயணக் குழுவை வழிநடத்திய சென் லிக்சின் கூறினார்.


இப்பகுதியில் உள்ள சிங்க்ஹோல்கள் கார்ஸ்ட் நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும் மற்றும் நிலத்தடி நீர் பாறைகளை கரைக்கும் போது இப்படியான குழிகள் உருவாகிறது. இதனால் குகை அறையின் மேற்புறம் இடிந்து விழுகிறது. இந்த மூழ்கும் குழிகளை  உள்ளூர்வாசிகள் ‘டியான்கெங்’ அல்லது ‘ஹெவன்லி பிட்’ என்று அழைக்கின்றனர்.


கடந்த ஆண்டு மே மாதம், விஞ்ஞானிகள் அடங்கிய குகை ஆய்வுக் குழு, சீன ‘ஜியோபார்க்கில்’ நிலத்தடி மர்மத்தை கண்டுபிடித்தது.

குவாங்சி டெய்லி செய்தித்தாளின் அறிக்கையின்படி, மூழ்கும் குழி ஆபத்தானது, விசித்திரமானது, செங்குத்தானது அதே சமயம்  அழகானது.


3000 மீ தடிமன் கொண்ட டெவோனியன் முதல் பெர்மியன் கார்பனேட் பாறைகளின் 60% க்கும் அதிகமான வண்டல் படிவு  இந்த சிங்க் குழிக்குள் . அதோடு குழிக்குள் குறைந்த வெளிச்சமே இருக்கும் என்பதை அதை வைத்து காடு வளர்ந்துள்ளது. மேலும் இந்த மரங்கள் ஒளியைத் தேடி மேல்நோக்கி வளர்ந்ததால் இங்குள்ள மரங்கள் எல்லாம் அதிக உயரம் கொண்டுள்ளது. ஆனால் மெலிதாக காணப்படுகிறது.



வெள்ளி, 15 நவம்பர், 2024

சுருக்கெழுத்து முறையை சர். ஐசக் பிட்மென் வெளியிட்ட நாள் நவம்பர் 15


🦉இதே நவம்பர் 15, 1937 – Short Hand என அழைக்கப்படும் சுருக்கெழுத்து முறையை சர். ஐசக் பிட்மென் வெளியிட்டார்.
பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தி சின்னஞ்சிறு பத்திகளில் தகவல்களையும், பேச்சுகளையும், விவரங்களையும் பதிவு செய்துகொள்ளும் முறையே சுருக்கெழுத்தாகும்.
விரைவாக எழுதும் இம்முறையில் பயிற்சி பெற்றவர்களைச் சுருக்கெழுத்தர் (stenographer) எனக்கூறுவர்.
Stenography என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். 'Steno' என்றால் குறுகிய (அ) சுருக்கிய, 'graphy' என்றால் எழுதுதல் என்பது பொருளாகும்.

வியாழன், 14 நவம்பர், 2024

சிறு வயது கால ஞாபகங்கள் ❤️🌴🛖👪

 1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் #சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.

கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும்.
இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய #சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.
ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .
அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.
இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.
அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,,
இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.
1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.
சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.
சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.
அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.
இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.
எப்படி ஆயினும் ...... பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன.


திங்கள், 11 நவம்பர், 2024

உணவை வீணடிக்காதீர்கள்

 நம்ம பணத்தில் பாணி பூரி வாங்கி சாப்பிடும் போது இறுதியாக அந்தத் தண்ணீரை ஒரு சொட்டு விடாமல் குடித்து முடிக்கிறோம்.


🍇நம்ம காசுல ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடும் போது அந்தக் பேப்பர் கப்பை நக்கி எடுக்கிறோம்.


🍓கடலை பாக்கெட் வாங்கி சாப்பிடும் போது. காலி பாக்கெட்டில் ஏதாவது ஒட்டி இருக்கிறதா .என்று தேடுகிறோம் .


🥭ஆனால் நம்மில் பலர் எந்த திருமணத்திற்கு சென்றாலும் பாதியை விட்டுவிட்டு கவலைப்படாமல் எழுந்து வருகிறது வழக்கமாகிவிட்டது.


🍍ஒருவர் தனது வாழ்நாள் முழுவதுமான உழைப்பை மகள் திருமணத்தில் அறுசுவை உணவாக வைக்கிறார். அந்த உபசரிப்புக்கு மிகுந்த மரியாதை செலுத்த வேண்டும்.


🍋நமது தேவைக்கேற்ப உணவை வாங்குங்கள். குறைவாக தின்றால் இன்னும் ஆரோக்கியம்தான். உணவை மதியுங்கள். உணவை வீணாக்காதீர்கள்.


🙏🏽உணவை #அன்னபூரணியாக மதியுங்கள். 🙏🏻 


பறவைகளின்காதல்

  பறவைகளின் காதல் வாழ்க்கை! மனிதர்கள்தாம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையோடு(!) வாழ்பவர்கள் என்று எண்ண வேண்டாம். சே…சே…நாங்கள் அப்படியெல்லாம...